கட்டுரை

இனியவை 40. அதிமுகவின் அதிரடி டெல்லிக் கணக்கு

முத்துமாறன்

அது 1998-99. பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்று டெல்லியில் 13 மாதங்கள் கோலோச்சியது. வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் பெரும்பாலும் தென்னகத்திலிருந்து ஜெயலலிதா தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அச்சப்படுவார் என்று சொல்வதுண்டு. முதல்முதலாக மத்திய ஆட்சியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றிருந்த ஜெ. தலைமையிலான அதிமுக அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். ஏகப்பட்ட இழுபறிகளுடன் நடந்த அந்த ஆட்சியை ஜெ. ஒரு தேநீர் விருந்து நடத்தி கலைத்தார். அது டெல்லியில் அவரது முதல் பலப்பரீட்சை. ஆனால் அடுத்து வந்த தேர்தலில் சாமர்த்தியமாக திமுக காய் நகர்த்தி பாஜகவுடன் கூட்டணி வைத்து டெல்லிக்கு வண்டி ஏறிவிட்டது. அதிலிருந்து மூன்று மத்திய அரசின் ஆட்சிக் காலங்களில் டெல்லியில் அதிமுகவுக்கு அதிகாரப்பங்கீடு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் அரியணையில் அதன் பின்னர் இரண்டுமுறை ஜெயலலிதா ஏறினாலும் டெல்லி அதிகாரம் என்பது அவர் கைக்குக் கிட்டவே இல்லை. ஆனால் அவர் தன் டெல்லிக் கனவை கைவிட்டுவிடவே இல்லை. எப்போதெல்லாம் அவர் டெல்லிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பெரும் பரபரப்பு இந்தியத் தலைநகரில் ஏற்படுமாறு பார்த்துக் கொண்டார்.

1999 சட்டமன்றத் தேர்தலின் போதே அவருக்கும் காங்கிரசுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. சோனியாவுடன் ஒரே மேடையில் ஏறிப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தார். 2001 சட்டமன்றத்  தேர்தலில் தமிழ்நாட்டு முதல்வராக ஆன பின்னர் சிலமாதங்கள் கழித்து புதுடெல்லிக்கு வந்தவர் சோனியாவை மிகக் கடுமையாகச் சாடினார்.  இப்படி அவரைச் சாடாமல் இருந்திருந்தார் என்றால், அரசியல் நியாயப்படி 2004 தேர்தலில் அதிமுகவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கக்கூடும். ஆனால் திமுகதான் பாஜக கூட்டணியில் இருந்து ஒரே தாவாகத் தாவி காங்கிரசில் ஏறிக் கொண்டது. அடுத்த இரண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகளிலும் இடம்பெறும் அரிய வாய்ப்பைப் பெற்றது.

2011ல் மூன்றாவது முறையாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபின்னர் ஜெவின் டெல்லி அரசியல்,  உரிமைக்குரல் கொடுக்கும் அரசியலாக மாற்றம் பெற்றது. டெல்லிக்கு மத்திய அரசின் கூட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம், மாநில அரசுகளை மத்திய அரசு முனிசிபாலிட்டிகள் போன்று நடத்துவதாக உரத்த குரல் கொடுத்தார்.  அதற்கு ஏற்றதுபோல் டெல்லிக்காரர்களும் நடந்துகொண்டார்கள். ஏழரை கோடி தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் ஜெயலலிதா. இம்மக்கள் தொகை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மக்கள் தொகைக்கே சமம்.  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் தன் 28  பக்க உரையை அவர் வாசித்துக் கொண்டிருக்கையில் பத்துபக்கம்கூடத் தாண்டவில்லை. மணியடித்து அடுத்த முதல்வரைப் பேசக்கூப்பிட்டார்கள். இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சம்பவங்கள். பல குமுறல் கடிதங்கள். வார்த்தைப் போர்கள்.

ராஜிவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று 2011-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகட்டும், இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதாகட்டும், ஜெ. மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்தார்.

இதன் உச்சக்கட்டம்தான் மூன்றுநாட்களுக்குள் மத்திய அரசு பதில் அளித்தே ஆகவேண்டும். இல்லையெனில் ராஜிவ் கொலையில் தண்டனை அனுபவிப்பவர்களை நாங்களே விடுதலை செய்துவிடுவோம் என்று சொன்னது. தமிழக அரசின் எந்த நடவடிக்கைக்கும் பதில் அளிக்க சுணக்கம் காட்டும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனே எதிர்வினை காட்டும்படி ஆயிற்று. அகில இந்திய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தன்னை ஒரு அதிரடி, ஆவேச, துணிச்சல்கார, மாநில உரிமைக்காகப் போராடும் அரசியல்வாதியாக அவர் கட்டமைத்துக் கொண்டார். இத்தனைக்கும் பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு என்கிற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில்.

2014 தேர்தலும் வந்துவிட்டது. இந்த தேர்தலை விட்டால் தலைநகரில் அதிமுக தன் செல்வாக்கை நிலைநாட்ட வசதியான வாய்ப்பு வேறெப்போதும் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் பாஜகவும் சரி; காங்கிரஸும் சரி இப்போது கூட்டணிக்கட்சிகளால் கைவிடப்பட்ட கட்சிகளாக இருக்கின்றன. பாஜகவுடன் சிவசேனாவும் அகாலிதளமும் தவிர யாரும் கூட்டணிக் கட்சிகளாக இல்லை. பீஹாரில் நிதீஷின் கட்சியும் விலகிச் சென்றுவிட்டது. காங்கிரசுக்கும் அதே நிலை. திரிணாமூல், திமுக ஆகிய கட்சிகள் விலகிவிட்டன. ஆந்திரப்பிரதேசத்தில் சீமாந்திரா கைவிட்டுவிட்டது. இந்த இரு தேசியக் கட்சிகளும் அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் கூட்டணிக்கட்சிகளை வைத்திருந்தவை. அதனாலேயே வெல்லமுடிந்தவை. ஆனால் இப்போது நிலை வேறு.

1)இந்த இருகட்சிகளில் அதிக இடங்களை வெல்லக்கூடிய நிலையில் பாஜக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும் அக்கட்சியும் இப்போது இருக்கிற கூட்டணி பலத்தில் 200 இடங்களைக்கூட தாண்டப்போவதில்லை. எனவே அக்கட்சியின் கூட்டணியில் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியைமக்க புதிய கட்சிகளின் உதவி தேவைப்படப் போகிறது. அதிக இடங்களை வெல்லும் எந்த கட்சிக்கும் தேர்தலுக்குப் பின்னர் பாஜக கதவுகளை மிகவும் விரிவாகத்  திறக்கும்.

2) காங்கிரஸ் இம்முறை பெரும் சரிவைச் சந்திக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் எப்படியாகிலும் நரேந்திரமோடியைப் பிரதமராக ஆக்கக் கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது. சமீபத்தில் சென்னைக்கு வந்துபோன காங்கிரஸ் கட்சியின் அதிமுக்கியமான நபர் தமிழகத்தில் இருக்கும் நிலவரத்தை விசாரித்து அறிந்தார். அவர் ஜெயலலிதாவுக்குத்தான் அதிகம் இடங்கள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் மோடியை புறந்தள்ளமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றாராம். வட இந்தியக் காங்கிரஸ்காரர்களே இந்த மனநிலைக்கு வந்துவிட்டார்கள். திமுககூட ஒரு கட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையை அறிந்ததால்தான் காங்கிரஸ் இப்படியொரு எதிர்பார்ப்புக்கு வந்துள்ளது என்று சொல்கிறார் விஷயம் அறிந்த ஒருவர்.

3) இரண்டு கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தமிழகத்தில் கூட்டணி அமைத்துள்ள ஜெயலலிதா கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் யார் அடுத்த பிரதமர் என்றுகேட்டபோது, ‘அதெல்லாம் தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெளிவாகச் சொல்லி சர்ச்சையைத் தவித்துவிட்டார். அகில இந்திய அளவில் இப்போது காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தலில் கூட்டணி வைத்து ஒரே அணியாகப் போட்டியிடப் போவதில்லை. ஆனால் பொதுவான கருத்து அடிப்படையில் இணைந்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னால் ஒரே அணியாக செயல்படுவோம் என்கிறார்கள்.  இந்த அணியில் வெளிப்படையாக பிரதமர் ஆக ஆர்வம் கொண்ட தலைவர்களாக முலாயம் சிங், நிதிஷ்குமார் போன்றவர்கள் உள்ளனர். வேறு சிலருக்கும் மனதுக்குள் ஆர்வம் இருக்கலாம். இக்கட்சிகள் தேர்தலில் வெல்லப்போகும் மொத்த இடங்களைப் பொருத்து இந்த அணியின் எதிர்காலம் இருக்கும். அதிமுககாரர்கள் ஆசைப்படுவது நடந்துவிட்டால் இந்த மாற்று அணியில் பெரிய கட்சியாக அதிமுகவே இருக்கும். இரண்டாவது பாயிண்டில் சொன்னதுபோல் காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்த  பல்வேறு மாநிலத்தலைவர்களைக் கொண்ட மாற்று அணி ஆட்சிக்கும் வருமேயானால் ஆளுக்கும் ஒரு  பக்கம் இழுப்பார்கள் எப்படி ஆட்சி நடக்கும் என்பது சிலரின் கேள்வியாக இருக்கிறது.

1980களின் இறுதியில் நிகழ்ந்த விபிசிங், சந்திரசேகர், அதன்பின்னர் 1996-ல் தேவகவுடா, குஜ்ரால் அரசுகளை அடுத்துவந்த பாஜக, காங்கிரஸ் அரசுகளும் கூட்டணி ஆட்சிகள்தான். இப்போது கூட்டணி ஆட்சிக்கு இந்தியக் கட்சிகள் பழக்கப்பட்டுள்ளன. முன்பு ஏற்பட்ட பெரிய சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று பதில் சொல்லப்படுகிறது.

எது என்னவாக இருந்தாலும் அதிமுகவுக்குள் இப்போது முழங்கும் மந்திரம் ‘நாற்பது லட்சியம்; 30 நிச்சயம்’ என்பதாகும். கடந்த சில நாடாளுமன்றத் தேர்தல்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் வலுவான கூட்டணி அமைக்கும் கட்சிகளே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரசுடன் சேரும் எந்த திராவிடக் கட்சியும் அதிக இடங்களை வெல்லும் என்பதுதான் எழுபதுகளில் இருந்து தமிழக அரசியல் வரலாறு.

“வெகுநாட்களுக்குப் பின்னால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளுடன் காங்கிரஸ் சேரமுடியாத அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது.  இந்த நிலை உருவாக ஜெயலலிதா நம்பிக்கையுடன் எடுத்த நிலைப்பாடே காரணம். அவர் பாஜக, பாமக மதிமுக என்று எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க நினைக்கவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்தார். சட்டமன்றத் தேர்தலுடன் தேமுதிகவையும் கழற்றிவிட்டு அக்கட்சியை அம்பலப்படுத்தினார். அதிமுகவே இருகட்சிக் கூட்டணியை மட்டும் நம்பி நிற்பதுதான் திமுகவையும் வி.சி., பு.த., ம.ம.க. போன்ற சிறிய கட்சிகள் மட்டும்போதும் என்று நெஞ்சு நிமிர்த்த வைத்துள்ளது. தேமுதிகவை சேர்த்துக்கொள்ள நினைத்தார்கள். ஆனால் அவர் அவ்வளவாகப் பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில் ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் விஷயத்தில் முதல்வர் எடுத்த நிலைப்பாடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவர் பின்னால் நிற்க வைத்துவிட்டது. எல்லாம் ஓட்டாக மாறும் என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்மீது ஏற்பட்டிருக்கும் நல்லெண்ணம் அவர் முடிவுக்கு உருவாகியிருக்கும் ஆதரவு, ஒரு மிகப்பெரிய கட்சியை கூட்டணிக்கு சேர்த்துக்கொண்டு நிற்பதுபோன்ற ஒரு தெம்பை எங்களுக்கு உருவாக்கி உள்ளது” என்று வெற்றிக் கணக்கைச் சொல்கிறார் அதிமுக பிரமுகர் ஒருவர்.

“இடையில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக ஆகிய இரு கட்சிகளுடன் திமுக கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருந்தது. அது உருவாகியிருந்தால் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பெருமளவு பாதிக்கபட்டுவிடும் என்று நாங்கள் கருதினோம். ஆனால் இந்த ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் விவகாரத்தை அரசியல்ரீதியில்  கையாண்டதில் காங்கிரசின் நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி இப்படியொரு கூட்டணி  உருவாவதை அம்மா தடுத்துவிட்டார். ஆனால் இனி அப்படியொரு கூட்டணி உருவானால்கூட எங்கள் வெற்றியைத் தவிர்க்கமுடியாது” என்று அடித்துச் சொல்கிறார் அவர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் மிகப்பிரதானமான விஷயமாக அதிமுக சார்பில் வைக்கப்பட இருக்கும் கோஷம் ஜெ.வை பிரதமர் நாற்காலியில் அமர வைப்போம். அல்லது மத்திய அரசை அம்மா தீர்மானிப்பார் என்பதாகவே இருக்கும். இந்த கோஷம் அரசியல்களத்தில் வாயுவேகத்தில் உருண்டு திரண்டு மலையாக வடிவம்பெறும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சிகள் இதைவிட கவர்ச்சியான, வலிமையான வேறெந்த கோஷத்தை வைக்கமுடியும்? ஊழல் எதிர்ப்பு, நிலையான மத்திய ஆட்சி, வலிமையான பாரதம் என்பதையெல்லாம் விட தமிழர் பிரதமர் ஆகவேண்டும் என்கிற விஷயம் ஈர்ப்பானதாக அமைந்துபோகலாம். ஏனெனில் இப்படியொரு கோஷம் தமிழக அரசியலில் வைக்கப்பட்டது இல்லை. ஆகிறாரோ இல்லையோ அதிகமான இடங்களை வெல்ல அது உதவும். அதன் பின்னால் டெல்லியின் குடுமி தன்னால் சென்னைக்கு வந்துவிட்டுப்போகிறது. இதுவே அதிமுகவினரின் கனவு.

மார்ச், 2014.